கடலூர் மாவட்டத்தில்பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார்பெட்டி அமைத்திட வேண்டும்நிறுவன உரிமையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி அமைத்திட வேண்டும் என நிறுவன உரிமையாளர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாலியல் துன்புறுத்தல்
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013, மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இச்சட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013-ல் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்களை பெற்றுக்கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட எந்த ஒரு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும் உள்ளக, புகார் குழு பிரிவு 4-ன்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அக்குழுவினை குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களை கொண்டு அமைத்திட வேண்டும். அவற்றில் பெரும்பாலானோர் பெண்களாக இருத்தல் வேண்டும்.
புகார்பெட்டி
மேலும் அந்தந்த நிறுவனங்களில் இச்சட்டத்தின் கீழ் புகார் அளிப்பதற்கு ஏதுவாக புகார் பெட்டி அமைத்திட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகாரின் மீது உள்ளக புகார் உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அக்குழுவின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை மனுதாரருக்கு திருப்தி அளிக்கவில்லையெனில் உள்ளூர் புகார் குழுவில் மேல்முறையீடு செய்யலாம்.
உள்ளூர் புகார் குழுவில் எந்த ஒரு நிறுவனத்தில் 10 நபர்களுக்கு குறைவாக பணியாளர் உள்ளனரோ அல்லது வீட்டு வேலை செய்பவர்களில் பாதிக்கப்பட்டுள்ள நபர் நேரடியாக தனது முதலாளிக்கு எதிராக உள்ளூர் புகார் குழுவில் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் தலைமையில் குழு
மேலும் இச்சட்டத்தின் கீழ் இதுவரை உள்ளக புகார் குழு அமைக்காத அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் விரைந்து குழு அமைத்திட மாவட்ட கலெக்டரால் அறிவுறுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் பணியிடங்களிலேயே புகார் அளிப்பதற்கு ஏதுவாக புகார் பெட்டி அமைத்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையிலும் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.