குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.வாழ்வார்மங்கலம் கிராம மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் 4 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், தினமும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம் மெட்டல் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பாதை ஆக்கிரமிப்பு
புஞ்சை புகழூர் ஊர்மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு யாரேனும் இறந்தால் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு உடலை எடுத்து சென்று அடக்கம் செய்து வருகிேறாம். ஆனால் சிலர் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து செய்து கொண்டு பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுடுகாட்டிற்கு உடலை எடுத்து செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.