கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மேடை மெல்லிசை கலைஞர்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இதில் 443 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 45 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் கரூர் மாவட்ட தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் சங்கத்தில் 54 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பலர் வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
எங்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தின் மீது கருணை கூர்ந்து உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி பட்டியல்படி இலவச வீட்டுமனை பட்டா வழங்க பரிந்துரை செய்து ஆதரிக்க வேண்டும். மேலும் விரைவில் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார உதவி
கரூர், வரவணை, சுண்டுகுழிப்பட்டியை சேர்ந்த பானுமதி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-நான் மாற்றுதிறனாளி. கணவரால் கைவிடப்பட்டவர். எனக்கு 9 வயதில் மகன் உள்ளான். எனக்கென்று சொந்தமாக வீடோ, வீட்டுமனையோ ஏதும் இல்லை.
எனது வாழ்வாதாரத்திற்கு எந்த வழிவகையும் இல்லை. எனவே எனக்கு அரசு குடியிருப்பில் வீடு வழங்கியோ அல்லது சுயதொழில் செய்வதற்கான பொருளாதார உதவிக்கோ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆய்வு
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் உள்ள 335 குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 12 குவாரிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதம் விதிக்கப்பட்ட, ஆய்வு செய்யப்பட்ட எந்த குவாரியும் டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்யப்படவில்லை (என்ஜிடி உத்தரவுப்படி எம்.எல்.ஏ. பழனியாண்டி கல்குவாரி மட்டும் டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்யப்பட்டது). கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மற்றும் அனுமதி முடிந்த 335 கல்குவாரிகளுக்கும் டிஜிட்டல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில்...
தலித் விடுதலை இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மல்லம்பாளையம், நன்னியூர், மாயனூர் ஆகிய பகுதிகளில் மணல் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை மீறி மணல் எடுக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு மணலை எடுத்து செல்லும் லாரிகளுக்கு அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றப்படுகிறது. எனவே குறிப்பிட்ட அளவு மணல் மட்டுமே ஆற்றில் இருந்து எடுக்கப்பட வேண்டும். அதை அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.