கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ேநற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.கூட்டத்தில், கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கீழ்பவானி கால்வாய் தண்ணீர் கடைமடை பகுதியான மொஞ்சனூர், அஞ்சூர் கிராமங்களுக்கு முழுமையாக வராமல் நின்று போகி உள்ளதால் விவசாயம் செய்ய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கீழ்பவானி கால்வாயில் அதிகரித்த கசிவு காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க இயலவில்லை என்று நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே கீழ்பவானி கால்வாயில் இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதிய தண்ணீரை பெற்றுக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

சாலை வசதி வேண்டும்

குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் கிராமம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், இ.புதுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் 130 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள யாரேனும் இறந்தால் சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

இதேபோல் ஓட்டுனர் உரிமைக்குரல் நுகர்வோர், தொழிலாளர் நல சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு நெடுஞ்சாலைகளில் இருந்து பிரியும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்து, உள்நுழைவு சாலைகளை காலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணிவரை கனரக வாகனங்கள் அனுமதிக்கு தடை செய்ய வேண்டும், இதற்கான புதிய ஆணையை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

விடுதி வசதி வேண்டும்

கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த 3 மாணவிகள் கொடுத்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கரூருக்கு வந்து கல்லூரியில் படித்து வருகிறோம். எனவே நாங்கள் அரசு பெண்கள் விடுதியில் தங்கி படிக்க இடம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Next Story