கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ெபாதுமக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 475 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 54 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 25 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 337 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், கடவூர் வடக்கு தெரு பொதுமக்கள் சார்பில் மனு ெகாடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் தெருவில் சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் உள்ள ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமான காட்டில் துப்பாக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் போலீசார் அந்த காட்டில் சோதனை நடத்தி அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து துப்பாக்கி ஒன்றை கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் எங்கள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட நடவடிக்கை
எங்கள் பகுதியில் வசித்து வரும் அந்த குடும்பத்தினர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள் என்று கருதுகிறோம். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு யாரோ செய்து இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. ஆகையால் இந்த மனுமீது விசாரணை வேண்டும். இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.