விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x

வைகையில் இருந்து திறக்கப்பட்டும் இதுவரை கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை

வைகையில் இருந்து திறக்கப்பட்டும் இதுவரை கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜீனு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நாகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளா் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

விவசாயிகள் சார்பில் கன்னியப்பன், தண்டியப்பன், வீரபாண்டியன், முத்துராமலிங்கம், சந்திரன், அய்யாச்சாமி, ராஜேந்திரன், போஸ், வக்கீல் ராஜா, பரத்ராஜா கலந்து கொண்டனர்.

தண்ணீர் வரவில்லை

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டும் பழையனூர், கட்டிக்குளம், கிருங்காகோட்டை, கீழபசலை உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதே போல் கால்பிரவு கீழமேடு உள்ளிட்ட 4 கண்மாய்களுக்கு செல்லும் வரத்து கால்வாய் ஆற்றைவிட மேடாக உள்ளதால் தண்ணீர் வரவில்லை. இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இல்லை. எனவே தரமான பொருட்களை வழங்க வேண்டும். சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் 2016-ம்ஆண்டு முதல் கரும்பு வழங்கிய விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையை இதுவரை தரவில்லை. ஆனால் வங்கிகள் பணத்தை கட்ட சொல்லி நெருக்கடி தருகின்றனர்.

சின்னகண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து எந்த நடவடிக்கையும் இல்ைல. மேலும் பயிர்க்காப்பீடு, உரம், பி.எம்.கிஷான் திட்டத்தில் நிதி, பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு தொகை, சம்பா மிளகாய் நாற்றுகள், காளான் உற்பத்தி இனத்தின் கீழ் மானியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

நடவடிக்கை

இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசியதாவது:- நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவா்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் மற்ற கோரிக்கைள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

பின்னர் 56 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


Next Story