குறைதீர்க்கும் கூட்டம்


குறைதீர்க்கும் கூட்டம்
x

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட 346 பேர் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து சீல் வைக்கப்பட்ட பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருச்சிற்றம்பலம், அய்யம்பேட்டை, பாப்பாநாடு, பாபநாசம், தொண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கடைகளின் உரிமையாளர்கள், வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் முருகேசன், வாசுதேவன், சதீஷ் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

சீலை அகற்ற வேண்டும்

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக எங்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யவில்லை. தற்போது கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், அதில் உள்ள சில தின்பண்டங்களை விற்பனை செய்ய முடியாததால் கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் அனைவரும் சிறிய வியாபாரிகள். சிலர் வட்டிக்கு கடன் வாங்கி கடையை நடத்தி வருகிறோம். எனவே கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி எங்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பூதலூர் அருகே கோவில்பத்து கிராமத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையம், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் இடத்தில் அறநிலையத்துறை அனுமதியோடு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கோவில் குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் நடைபெறுவதால், இந்த ஆண்டு கொள்முதல் நிலையம் கோவில் இடத்தில் செயல்படாது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறுவையில் கொள்முதல் நிலையம் செயல்படும் என்பதால் இப்பகுதியில் 600 ஏக்கரில் நெல் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யப்படும் நிலை உள்ளதால், உடனடியாக கோவில்பத்து கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story