விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்கும் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

அரசே விலை நிர்ணயம்

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் விவசாய விளைபொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.‌ அப்போது அவர் கூறியதாவது:- மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க கூடாது. சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். காவிரி திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவ்வரிசி ஆலை

நாமக்கல் மாவட்டத்தில் நீரேற்று பாசன திட்டம், குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பாதைகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழாய் மூலம் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மதுபாட்டில்களை விவசாய நிலங்களில் வீசி எறிந்து செல்வதை தடுக்க காலி மதுபாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்திட அரசின் சார்பில் கூட்டுறவு ஜவ்வரிசி ஆலையை நிறுவ வேண்டும்.

இவ்வாறு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் (பொ) பாஸ்கர், தோட்டக்கலைத் துணை இயக்குனர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story