மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம்
ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.
ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் நில அளவர் சங்க கட்டிடத்தில் ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.கே.தங்கமணி வரவேற்றார்.
கூட்டத்தில் ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகாவில் உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், பயனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். உடனடியாக கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும், காதுகேளாத 3 நபர்களுக்கு காதொலி கருவியும் வழங்கப்பட்டது.
இதில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் தாலுகா பகுதியில் இருந்து அரசுத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.