இருளர் இன மக்களிடம் குறைகள் கேட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு


இருளர் இன மக்களிடம் குறைகள் கேட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
x

கந்திலி அருகே இருளர் இன மக்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் சிறுதொழில் செய்ய விரும்பினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திருப்பத்தூர்

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கந்திலி போலீஸ் நிலையத்தில் ஆவணங்களை சரி பார்த்தார். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், மற்றும் போலீசாரிடம் நிலுவை வழக்குகள் குறித்தும், வாகன சோதனைகள், இரவு ரோந்து பணிகள் குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கந்கிலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துக்கள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கவும், குற்றச்செயல் இல்லாத போலீஸ் நிலையமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

கந்திலி அருகே 25 இருளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதிக்கு நேரில் சென்ற போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எங்கு படிக்கிறார்கள் என கேட்டு அவர்களுக்கு இனிப்புகள், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், வழங்கினார்.

சிறுதொழில் செய்ய

போலீஸ் தரப்பில் தங்களுக்கு ஏதாவது உதவி தேவையா என கேட்டறிந்தார். பின்னர் அங்கு தமிழக அரசு சார்பில் கட்டப்படும் வீடுகளையும் பார்வையிட்டார். பள்ளிப் பிள்ளைகளிடம் நன்றாக படித்து தாங்களும் போலீஸ் சூப்பிரண்டாக, கலெக்டராக ஆக வேண்டும் எனக் கூறினார். தற்போது இருளர் சமுதாயத்தினர் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபடுகிறீர்களா? எனவும் கேட்டார். தங்களுக்கு வேறு ஏதாவது சிறு தொழில் செய்ய வேண்டுமானால் அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து இருளர் இன குடும்பத்தினருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


Next Story