குட்கா விற்பனை செய்த மளிகை கடைகளுக்கு 'சீல்'
குட்கா விற்பனை செய்த மளிகை கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வக்கணம்பட்டி பகுதியில் உள்ள வேலவன் (வயது 47) என்பவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து தனிப்படையினர் ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகத்திற்கும், வருவாய் துறை தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறை அதிகாரிகள், கடையில் பதுக்கி வைத்திருந்த 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் வேலவனை கைது செய்து, மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.
அதேபோன்று ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.