மளிகை கடைக்காரர் அடித்துக்கொலை
ஏர்வாடி அருகே மளிகை கடைக்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் ஜவகர்லால் நேரு (வயது 60). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு, ஜவகர்லால் நேரு வீட்டிற்கு வந்தார். இரவில் வீட்டின் முன் உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார்.
நள்ளிரவில் அங்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று ஜவகர்லால் நேருவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலையில் ஜவகர்லால் நேரு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக ஏர்வாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஜவகர்லால் நேரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜவகர்லால் நேரு மளிகை கடை நடத்தி வந்தாலும், மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை, மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் மர்ம நபர்கள் பிடிபட்ட பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி ேதடிவருகிறார்கள்.