ஈரோட்டில் பருப்பு வகைகள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம்
ஈரோட்டில் பருப்பு வகைகள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் பருப்பு வகைகள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பருப்பு விலை உயர்வு
குடும்பத்துக்கு தேவையான மளிகை பொருட்களை மாதத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ வாங்குவது வழக்கம். குறிப்பாக சம்பளம் கிடைத்த உடன் மளிகை பொருட்கள் வாங்குவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த மாதம் வாங்கிய மளிகை பொருட்களையே தான் மீண்டும் இந்த மாதமும் வாங்குவார்கள். ஆனால் கடந்த மாதம் ரூ.4 ஆயிரம் கொடுத்து வாங்கிய அதே பொருட்களை இந்த மாதம் ரூ.4 ஆயிரத்து 300 கொடுத்து வாங்கி இருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு தெரியவரும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்று...
வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கும்போது நம்மால் விலை உயர்வை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் கிலோவுக்கு 1 ரூபாய், 2 ரூபாய் கூடும்போது நாம் அதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் கிலோவுக்கு ரூ.10, ரூ.20 என கூடும்போதோ அல்லது குறையும்போதோ அது பெரிதாக பேசப்படும். அதன்படி கடந்த மாதம் விற்பனையான பருப்பு வகைகள் இந்த மாதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளைச்சல் குறைவு
இதுகுறித்து ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் உதயம் பி.செல்வம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம், குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து துவரம் பருப்பும், மத்திய பிரதேசத்தில் இருந்து கடலை பருப்பும், ஆந்திரா, கார்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் இருந்தும், தமிழ்நாட்டில் தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் உளுந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த ஆண்டு பருப்பு வகைகள் விளைச்சல் குறைவாக உள்ளதாலும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மொத்தமாக பருப்பு வகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளதாலும் பருப்பு வகைகள் கடந்த மாதத்தை விட இந்த மாதம் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ரூ.132-க்கு விற்பனை ஆன துவரம்பருப்பு இந்த மாதம் ரூ.148-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை விவரம்
இதேபோல் டாலரின் மதிப்பை பொறுத்தும், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை பொறுத்தும் சமையல் எண்ணெய் விலை கூடும், குறையும். தற்போது சமையல் எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.970-க்கு விற்பனை ஆன 10 லிட்டர் சமையல் எண்ணெய் இந்த மாதம் ரூ.880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் மொத்த விலை கிலோவில் வருமாறு:- (சில்லரை விலையில் மாறுதலுக்குட்பட்டது)
சர்க்கரை-ரூ.38.80, துவரம் பருப்பு -ரூ.148, கடலை பருப்பு ரூ.67.50, பாசி பருப்பு -ரூ.106, பச்சை பட்டாணி -ரூ.62, குண்டு உளுந்து -ரூ.120, உடைத்த உளுந்து -ரூ.136, தட்ைடப்பயறு -ரூ.86, அவரை பருப்பு -ரூ.164, கொண்டை கடலை (வெள்ளை) ரூ.134, கொண்டை கடலை (கருப்பு) -ரூ.83, பொட்டு கடலை -ரூ.78.60, புளி -ரூ.103, ஜவ்வரிசி -ரூ.67, குண்டு வெல்லம் -ரூ.46, பூண்டு -ரூ.145, காய்ந்த மிளகாய் -ரூ.265, கடுகு -ரூ.78.80, சீரகம் - ரூ.590. சமையல் எண்ணெய் -ரூ.88 (ஒரு லிட்டர்), கடலை எண்ணெய் -ரூ.169.