ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நிலக்கடலை வரத்து அதிகரிப்பு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நிலக்கடலை வரத்து அதிகரிப்பு
போடிப்பட்டி
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி
வண்டல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற காலங்களாகும்.உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்த அளவிலேயே நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.அதேநேரத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கடலை தேவை அதிகம் இருக்கிறது.இதனைக் கருத்தில் கொண்டு ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பச்சை நிலக்கடலையை வாங்கி வந்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட உலர்களங்களில் காய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மண் வளம்
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது'உடுமலை மட்டுமல்லாமல் காங்கேயம் பகுதி எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் நிலக்கடலை பருப்பு தேவை அதிகம் இருக்கிறது.எனவே நிலக்கடலையை வாங்கி வந்து காய வைத்து தோல் நீக்கி பருப்புகளாக்கி விற்பனை செய்து வருகிறோம்.நல்ல வெயில் காலத்தில் ஒரு சில நாட்களில் பச்சைக்கடலை நன்கு காய்ந்து விடும்.ஆனால் தற்போதைய பருவநிலையில் நன்கு காய்வதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது மழை பெய்வதால் கடலை நனையாமல் பாதுகாக்க தார்ப்பாய்களுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியதுள்ளது.நிலக்கடலைக்கு தேவை அதிகம் உள்ள நிலையில் நல்ல மண் வளம் உள்ள உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார விவசாயிகளும் நிலக்கடலை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.அதற்கான சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும்'என்று வியாபாரிகள் கூறினர்.