பயன்படாத ஆழ்துளை கிணறுகளின் அருகில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணி
உலக சாதனை நிகழ்த்தும் வகையில் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளின் அருகில் 14 நாட்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
உலக சாதனை நிகழ்த்தும் வகையில் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளின் அருகில் 14 நாட்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
14 நாட்களில் உலக சாதனை
திருவண்ணாமலை மாவட்டம் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, உழவின்மை என பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்குத் திட்டத்தின்படி மழைநீரினை தேக்கி வைத்து உபயோகிக்க திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பயனாளிகளை பயன்படுத்தி மாவட்டம் முழுவதும் 1333 நிலத்தடி நீர் மீள்நிரப்பு் கட்டமைப்புகளை அமைக்கவுள்ளது.
இந்த நிகழ்வு "மிக அதிக நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை பயன்படாத ஆழ்துளைக்கிணறுகளின் அருகில் 14 நாட்களில் நிறுவுதல்" என்ற மாபெரும் உலக சாதனையை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் படைக்கவுள்ளது.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும் இணைந்து மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில்
602 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 18 வட்டாரங்களிலும் தற்பொழுது உபயோகத்தில் இல்லாத 1,333 ஆழ்துளைக் கிணறுகளை சுற்றிலும் 3 அடி நீளம், 3 அடி அகலம் மற்றும் 2½ அடி ஆழம் உள்ளவாறு குழிகளை ஏற்படுத்தி ஆழ்துளை கிணறுகளின் குழாய்களில் நீர்கசிவு துளைகளை அமைத்து மண் செல்லாத வகையில் சுற்றி வலைகள் அமைக்கப்படும்.
தன்னிறைவு பெற்ற மாவட்டம்
அந்த குழி முழுவதிலும் ஜல்லிக் கற்களை நிரப்பி அதன் மேற்பரப்பில் ½ அடி உயரத்திற்கு குழியைச்சுற்றி சுவரும் எழுப்பப்படவுள்ளது.
மேலும் ஜல்லி நிரப்புவதற்கு முன்பு மழைநீர் உட்புகுவதற்கு வசதியாக குழியின் 4 பக்கங்களிலும் பக்கத்திற்கு 3 குழாய்கள் வீதம் 12 குழாய்கள் பதிக்கப்படவுள்ளது.
ஒரு மீள்நிரப்பு கட்டமைப்பு ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தமுள்ள 1,333 மீள் நிரப்பு கட்டமைப்புகள் ரூ.6 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் பருவ காலங்களில் கிடைக்க பெறும் மழை நீரினை வீணாக விடாமல் உடனடியாக மண்ணிற்குள் செலுத்தி விட இயலும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறிவிடும்.
இந்த 1,333 மீள் நிரப்புக் கட்டமைப்புகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், அரசுப் பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், அரசுத் திருமண மண்டபங்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர்வழித் தடங்களில் முன்பே அமைக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றி அமைக்கப்பட உள்ளது.
4 உலக சாதனை நிறுவனங்கள்
இந்த 1333 நிலத்தடி நீர் மீள்நிரப்புக் கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கருந்துவாம்பாடி, புதுமல்லவாடி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வேங்கிக்கால் ஊராட்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளுக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி. முன்னிலை வகித்தார்.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கூறுகையில், இந்த உலக சாதனை நிகழ்வானது 14 நாட்களுக்குள் அதாவது வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதிக்குள் பணிகள் முழுவதும் நிறைவு செய்யப்படும். ஓராண்டில் திருவண்ணாமலை மாவட்டம் சராசரியாக 1040 மில்லி மீட்டர் மழைப் பொழிவினைப் பெறுகிறது.
இந்த 1,333 நிலத்தடி நீர் மீள்நிரப்புக் கட்டமைப்புகளின் மூலமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்வடைய உள்ளது. இந்த புதிய உலக சாதனை முயற்சியை எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனத்தினர் நேரில் வருகை தந்து ஆய்வு செய்து சான்றுகள் வழங்கவுள்ளார்கள் என்றார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தமிழ்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.