நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் தடுப்பணைகள்
நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் தடுப்பணைகள்
தளி
தளி, அமராவதி பகுதி தடுப்பணைகளில் தேங்கியுள்ள தண்ணீரால் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தடுப்பணை
உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். சாகுபடி பணிகளுக்கு திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய்கிணறுகள், பருவமழை கை கொடுத்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு நீண்டகால பயிர்கள், காய்கறிகள், தானியங்கள், மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து நீராதாரங்களில் தேங்குவதால் நிலத்தடி நீர் இருப்பும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தடையில்லாமல் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த சூழலில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பின்பு தளி அமராவதி பகுதியில் அவ்வப்போது சாரல் மற்றும் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதுடன் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளம் நீர்வழித்தடங்களின் குறுக்காக ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தேங்கி நின்ற வண்ணம் உள்ளது. இதன் காரணமாக சுற்றுப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர்இருப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
கூடுதல் விளைச்சல்
இதேபோன்று நீர் வழித்தடங்களின் குறுக்காக கூடுதலாக தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை வீணாகாமல் முழுமையாக சேமிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதால் கூடுதல் விளைச்சலை இயற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.