மழை நீரில் மூழ்கி அழுகும் கடலை செடிகள்
சிங்கம்புணரி அருகே மழை நீரில் மூழ்கி கடலை செடிகள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள். எனவே போதுமான நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே மழை நீரில் மூழ்கி கடலை செடிகள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள். எனவே போதுமான நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலை செடிகள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றியுள்ள கிராமங்களில் வானம் பார்த்த பூமியாக விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. கிராமங்களில் மழை நீரை நம்பி காலத்திற்கும் கோடைக்கும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கோடை விவசாயத்திற்கும், காலத்திற்கான விவசாயத்திற்கும் மழை நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
கோடை காலத்தில் நெற் பயிர்களும், காலத்திற்கு கடலை செடிகளும் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிங்கம்புணரி அருகே பிரான்மலை மற்றும் ஒடுவன்பட்டி மலை பகுதிகளில் சுமார் 15 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதிகளில் சில நாட்களாக பெய்த மழை நீராலும் மற்றும் ஒடுவன்பட்டி மலையில் இருந்து கசிகின்ற மழைநீர் அனைத்தும் புகுந்து கடலைச் செடிகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி உள்ளன.
நிவாரணம்
இதுகுறித்து விவசாயி ராமு கூறும்போது, கடன் வாங்கி விவசாயம் செய்கிற நாங்கள் மழை நீரை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் பள்ளமான பகுதி மலை பிரதேச அடிவாரத்தில் பள்ளமான பகுதியில் தற்போது மழைநீர் தேங்கி நிற்பதாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக வெப்பத்தாலும் போதுமான விளைச்சல் கடலை செடியில் இல்லை குறிப்பாக ஒரு கடலைக் கொடியில் 20-ல் இருந்து 30 கடலைகள் இருக்கக்கூடிய கடலைக் கொடி செடியில் ஒரு கடலை, இரண்டு கடலை மட்டுமே முளைத்துள்ளது.
கடலைகள் முளைக்கவில்லை என்றாலும் கடலைசெடி கொடிகளை பயன்படுத்தியாவது மாடுகளுக்கு தீவனமாக போடலாம் என்று எண்ணிய விவசாயிகள் அதற்கு பலன் தராமல் மழை பெய்து கடலை செடிகளும் மழை நீரில் மூழ்கி அழுகி வருகிறது. இந்த பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் மானவாரியில் பயிரிடப்பட்டுள்ள கடலை செடிகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகி வருகிறது. இதனை அரசு கருத்தில் கொண்டு கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற விவசாயிகளின் நிலை பரிதாப நிலையில் உள்ளது. எனவே மழையால் அழுகிப்போன கடலை செடிகளுக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.