400 ஏக்கர் நிலக்கடலைகள் அழுகும் அவலம்
400 ஏக்கர் நிலக்கடலைகள் அழுகும் நிலையில் உள்ளது.
எஸ்.புதூர்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி, சிவகங்கை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் குளம்போல் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் உழவார பணி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை அடிவார பகுதியாக உள்ள மேலவண்ணாயிருப்பு, கீழ வண்ணாயிருப்பு, மின்னமலைப்பட்டி, கல்லங்களப்பட்டி, உரத்துப்பட்டி, வெள்ளிக்குன்றம்பட்டி, திருவாழ்ந்தூர், ஒடுவன்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை மற்றும் கடலை பயிரிட்டிருந்தனர். அதில் சுமார் 400 ஏக்கர் வரை நிலப்பரப்பில் விவசாயிகள் கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது நல்ல விளைச்சல் பருவத்தை எட்டியுள்ள நிலையில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக வயல்களில் முற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அறுவடைக்காக காத்திருந்த கடலை செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதையடுத்து வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.