குரூப்-1, 2, 4 போட்டித் தேர்வுகளை குறிப்பிட்ட மாதத்தில் நடத்தவேண்டும் -தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


குரூப்-1, 2, 4 போட்டித் தேர்வுகளை குறிப்பிட்ட மாதத்தில் நடத்தவேண்டும் -தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
x

குரூப்-1, 2, 4 போட்டித் தேர்வுகளை குறிப்பிட்ட மாதத்தில் நடத்தவேண்டும் -தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.

சென்னை,

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித்தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை அண்மையில் வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டு திட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்துள்ளன.

மேலும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான தேர்வு 2024-ம் ஆண்டுதான் நடைபெறும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

கவர்னர் உரையில் அரசுப்பணிகளில் 10,402 பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை உறுதி அளிக்கப்பட்ட நிலையில், துறைவாரியான காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் தெரியவருகிறது.

அத்துடன் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மற்றும் டி.என்.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் எனவும், குரூப்-1, 2, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story