92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு... ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை
குரூப்-1 பதவிகளில் வரும் 92 பணியிடங்களுக்கான முதல்நிலைத்தேர்வு நேற்று நடந்தது. ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-1 பதவிகளில் வரும் 18 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த பதவிகளுக்கான தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத்தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தகுதி உடையவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. ஹால்டிக்கெட்டை வழங்கியது.
இவர்களுக்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 1,080 தேர்வு மையங்களில் நடந்தது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மொத்தம் 200 வினாக்கள் கொண்ட தேர்வாக இது நடத்தப்பட்டது.
மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே தேர்வை எதிர் கொண்டனர். ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்களின் சதவீதம் 59.23 ஆகும்.
இதன்படி பார்க்கையில் குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 இடங்களில், ஒரு இடத்துக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 75 பேர் போட்டியிடுகின்றனர். முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்ததாக முதன்மைத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே நேற்று நடந்த முதல்நிலைத்தேர்வை பொறுத்தவரையில் வினாக்கள் சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். ஆனால் வினாக்களை புரிந்து பதில் அளிப்பதற்கு ஏதுவான நேரம் போதுமானதாக அமையவில்லை என்று பலர் கூறினர். நடப்பு நிகழ்வு வினாக்கள் பகுதியில் கடந்த மாதம் வரை நடந்த நிகழ்வுகள் கூட வினாக்களில் இடம் பெற்று இருந்ததாகவும், அதிலும் குறிப்பாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது தொடர்பான வினா கேட்கப்பட்டு இருந்ததாகவும் தேர்வர்கள் கூறினர்.
இதுதவிர தேசிய கல்விக்கொள்கை, கவர்னரின் அதிகார வரம்பு, குடியுரிமை திருத்த சட்டம் உள்பட சில வினாக்களும் கேட்கப்பட்டு இருந்தன. அதேபோல், முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களில், சுமார் 10 முதல் 15 வினாக்கள் வரை கேட்கப்பட்டு உள்ளன.
குரூப்-1 பதவிக்கான காலியிடங்கள் அறிவிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு. கடந்த ஆண்டில் ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவில், முதன்மைத் தேர்வுக்கு ஒரு இடத்துக்கு 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுமானால், முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.