ராமநாதபுரத்தில் இன்று குரூப்-2 மெயின் தேர்வு
ராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் குரூப்-2 மெயின் தேர்வை 7 மையங்களில் 1,196 பேர் எழுதுகின்றனர். இதையொட்டி கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் குரூப்-2 மெயின் தேர்வை 7 மையங்களில் 1,196 பேர் எழுதுகின்றனர். இதையொட்டி கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 மெயின் தேர்வு இன்று காலை, மாலை இருவேளையும் நடைபெறுகிறது. ராமநாதபுரத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 1,196 பேர் எழுதுகின்றனர்.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களில் உள்கட்டமைப்பு, குடிநீர் வசதி, தடையில்லா மின்சார வினியோகம் ஆகிய வசதிகளை செய்திட சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கண்காணிப்பு பணி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவுரைப்படி தேர்வு எழுத வருபவர்கள் காலை 9 மணிக்குள் வர வேண்டும். அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. போலீசார் மூலம் தேர்வு மையங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு சப்-கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக்மன்சூர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் பார்த்திபன், ராமநாதபுரம் தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.