குழு போட்டிகள்
நாகையில் வருவாய் மாவட்ட அளவிலான குழு போட்டிகள் நடந்தது.
கல்வித்துறை சார்பில் பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி வருவாய் மாவட்ட அளவிலான குழு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் ஏற்றி வைத்தார். போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜா ஹென்றி, முன்னாள் மாணவர் சந்தானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கி, கபடி, கைப்பந்து, இறகு பந்து, மேஜை பந்து, கோ-கோ உள்ளிட்ட பல்வேறு குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் நாகை, வேதாரண்யம், சிக்கல், நாகூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.