ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி.
வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரி மட்டும் இல்லை என்றால், அரசுகள் செயல்படமுடியாது. வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அரசுகள் மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்துகின்றன. வரிகளை பொறுத்தமட்டிலும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்ற 2 பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. மறைமுக வரியாகும். ஜி.எஸ்.டி. வரி முறையை உலகிலேயே முதலாவதாக 1954-ம் ஆண்டு பிரான்சு நாடு அறிமுகப்படுத்தியது.
தற்போது அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியான்மர் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. மத்திய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, பொழுதுப்போக்கு வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்பட வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக ஜி.எஸ்.டி. இருக்கிறது.
ஒரே வரி விகிதம்
நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே மாநிலத்துக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் அதாவது மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. அதன் வருவாயை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஐ.ஜி.எஸ்.டி.) மத்திய அரசினால் விதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 நிலைகளில்(சிலாப்ஸ்) வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரி விதிப்பு முறை என்பது, சேவை துறைகளுக்கு கட்டுமான உருவாக்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருப்பதால், ஜி.எஸ்.டி.யில் ஒரே நிலையில் அதாவது விலக்கு எதுவும் இல்லாமல் ஒரே விகிதத்தில்(ஒரே சிலாப்) வரி விதிப்பினை கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சாத்தியமா?
ஜி.எஸ்.டி. என்பது 'ஒரே நாடு ஒரே வரி' என்ற அடிப்படையில் உருவானது. நாடு முழுவதும் ஒரே சீராக விதிக்கப்படும் அதில், வரி விகிதங்களில் சில பிரிவுகள் இருக்கின்றன. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரின் கருத்து ஏற்கப்பட்டால், 'ஒரே நாடு ஒரே வரி' என்ற நிலையில் இருந்து 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே வரி விகிதம்' என்ற நிலைக்கு ஜி.எஸ்.டி. மாறிவிடும். 'ஒரே ஜி.எஸ்.டி., ஒரே வரி' என்ற முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேறுபாடுகளை களைய வேண்டும்
புதுக்கோட்டை வர்த்தக சங்க தலைவர் சாகுல் ஹமீது:- "மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வந்துவிட்டது. இந்த வரியினால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும் அடிக்கடி இந்த வரியை உயர்த்திக் கொண்டே செல்வதால் வியாபாரிகளும் பெரும் சிரமம் அடைகின்றனர். தங்கத்திற்கு 2 சதவீதம் வரி. ஆனால் பிஸ்கெட்டிற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பில் உள்ள வேறுபாடுகளை களைய வேண்டும்" என்றார்.
வரியை குறைத்து ஒழுங்குபடுத்த வேண்டும்
வர்த்தக பிரமுகர் முகமது ஜஹாங்கீர்:- "ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வரியை செலுத்துவது பொதுமக்கள் அனைவரும் தான். அன்றாட தேவைக்காக உள்ள உணவு பொருட்கள் உள்பட அனைத்து வகைகளிலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வந்துவிட்டது. வரி விதிப்பு கூடும் போது பொருட்களின் விலையும் உயருகிறது. ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. இந்த வரி விதிப்பை குறைக்க வேண்டும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நிலையான ஜி.எஸ்.டி. வரியை விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி மூலம் அனைத்தும் நடைமுறைகளுக்கும் உரிய கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் வரி ஏய்ப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஜி.எஸ்.டி. வரியை குறைத்து ஒழுங்குபடுத்தினால் வரி ஏய்ப்பு மேலும் குறையும்" என்றார்.
நுகர்வோரை குழப்பும் வரிவிதிப்பு
கறம்பக்குடியை சேர்ந்த கணேசன்:- 0-வில் தொடங்கி 28 சதவீதம் என விதிக்கப்பட்ட வரி விகிதம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடும் போதெல்லாம் அவ்வப்போது மாற்றபட்டு உள்ளது. அதிகரிப்பது, குறைப்பது, வரி இல்லாத பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவருவது போன்ற செயல்பாடுகள் விற்பவருக்கும், வாங்குபவருக்கும் பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது. உணவுதானியங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரியால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். உதிரியாக வாங்கும் அரிசிக்கும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் 10 கிலோ அரிசிக்கும் கிலோவிற்கு ரூ.4 வித்தியாசம் உள்ளது. ஜி.எஸ்.டி.வரி குளறுபாடியால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. வரியை காரணம் காட்டி கூடுதல் விலை வைத்து ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் பெரும்பாலான நுகர்வோருக்கு உள்ளது. எனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பை சீராக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.
ஒரே மாதிரி...
அறந்தாங்கி கோட்டையை சேர்ந்த ரகுபதி:- ஜி.எஸ்.டி. வரி குறித்து கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை. வியாபாரிகளை விட மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் ஜி.எஸ்.டி. வரியை ஒரே மாதிரி கொண்டு வந்து அனைத்து வியாபாரிகளையும் வரி செலுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்றார்.
வேதனை
கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜலிங்கம்:- நடுத்தர மக்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை பலரும் ஜி.எஸ்.டி.வரி பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இருந்து வருகின்றனர் .எந்த பொருள் வாங்கினாலும் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என கூறியே பொதுமக்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் விலை உயர்வு பெற்றுள்ளது பெரும் வேதனையை தருவதாக உள்ளது என்றார்.
வரியால் மக்கள் அவதி
கீரமங்கலத்தை சேர்ந்த ராம்குமார்:- வரி விதிப்பால் சாதாரண மக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலிக்கு போறவங்க தினசரி அரிசி, மளிகை, காய்கறிகள் வாங்கும் போது அவர்களின் தலையில் அதிகமான வரி சுமையாக தூக்கி வைக்கப்படுகிறது. இது போன்ற ஏழைகளிடம் தான் அதிகமான வரியே வசூலிக்கப்படுகிறது. ஒரு பொருளை உற்பத்தி செய்பவருக்கு கிடைக்கும் லாபத்தைவிட வரி அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இது போன்ற படிப்படியான வரியால் மக்கள் தான் அவதிப்படுகிறார்கள். வரிச்சுமை சீராக இருக்க வேண்டும் என்றார்.
கணக்குகள் தணிக்கை
புதுக்கோட்டையை சேர்ந்த ஆடிட்டர் அண்ணாமலை:- ''சரக்கு மற்றும் சேவை வரி என்பது அரசாங்கத்திற்கு அதிகம் வருவாய் ஈட்டித் தரக்கூடிய புதிய சட்டமாகும்.
இந்த சட்டத்தின் கீழ் அனைத்து விதமான நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. தவறுகளுக்கும், ஏமாற்று வழிகளுக்கும் இதில் வாய்ப்பு குறைவு. பொருட்கள் அனைத்தும் பில்லுடன் விற்பனை என்பதால் பில் இல்லாமல் எந்த பொருட்களும் விற்பனை செய்ய முடியாது. 2-ம் நம்பர் வியாபாரம் என்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இந்த வரியினால் வியாபாரிகளுக்கு எந்தவித இழப்பும் இல்லை. பொருட்களுக்கான வரியை பொதுமக்கள் செலுத்துகிறார்கள். வரியை வாங்கி அரசாங்கத்திற்கு செலுத்தும் ஒரு முகவர்கள் போல செயல்படுகிறார்கள். ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகம் உள்ள வியாபாரத்திற்கு கணக்குகள் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதேபோல கணினி நடைமுறைகள் தெரியாத சிறு வியாபாரிகள் எங்களிடம் வந்து ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வார்கள். இந்த வரிவிதிப்பை ஒரே மாதிரியாக கொண்டு விதித்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களுக்கு தவிர்த்து விட்டு ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிக்கலாம்'' என்றார்.
மக்கள் பணம் மக்களுக்கே...
பொருளாதார பேராசிரியை குஞ்சம்மாள்:- ''இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் வணிகத்தை எளிதாக்குவதற்காகும். ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு கூட்டி இந்த வரி விதிக்கப்படுகிறது. மாநிலங்களில் இருந்த வரிவிதிப்பு வேறுபாடுகளை களைந்து நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பை கொண்டு வந்துள்ளது. இந்த வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு வளர்ச்சி தான். ஜி.எஸ்.டி.யில் எந்த மறைமுகமும் இல்லை. இந்த வரியானது பொதுமக்களிடம் இருந்து அரசாங்கம் பெற்றாலும், அதனை மக்கள் நலத்திட்டங்களுக்கு தான் பயன்படுத்தும். இதனால் மக்கள் பணம் மீண்டும் மக்களிடமே வருகிறது என்பது தான் எனது கருத்து'' என்றார்.