உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது.
சென்னை,
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை நீக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கும் ஜி.எஸ்.டி. வரி உயர்வை உடனடியாக மத்திய அரசு நீக்க வலியுறுத்தியும், மாநில செஸ்வரி விதிப்பை மறுபரிசீலனை செய்து அதனை மாநில அரசு நீக்கக்கோரியும் வணிகர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அதனைத்தொடர்ந்து ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
உணவு பொருட்கள் மீது போடப்பட்டு இருக்கும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். அரிசிக்கு இதுவரை எந்த அரசும் வரிவிதித்தது கிடையாது. இந்த அரசு 5 சதவீதம் விதித்துள்ளது. இதேபோல், பால் பொருட்களுக்கும், இரும்பு பொருட்களுக்கும் வரியை அதிகரித்திருக்கிறது. இந்த வரி உயர்வை எந்த முகாந்தரமும் இல்லாமல் உடனடியாக திரும்ப பெறவேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எங்களுடைய அடுத்தகட்ட போராட்டம், மதுரையில் உண்ணாவிரத போராட்டமாக நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதல்-அமைச்சர் செஸ்வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும். அவருடைய கவனத்துக்கு இதை கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.