விஷம் குடித்து காவலாளி தற்கொலை
விஷம் குடித்து காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட லட்சுமி நகர் காட்டு பகுதியில் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இருந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்தவர் திருச்சுழி தாலுகா இலுப்பைகுளம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் முருகன் (வயது 55) என்பதும், தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்ததாகவும், இதனால் மனவேதனை அடைந்த வடிவேல் முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.