பணிபாதுகாப்பு வழங்கக்கோரி பாதுகாவலர்கள் மனு
பாதுகாப்பு இல்லத்தில் தாக்குதல் நடத்திவிட்டு சிறுவர்கள் தப்பியோடிய நிலையில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி பாதுகாவலர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
பாதுகாப்பு இல்லத்தில் தாக்குதல் நடத்திவிட்டு சிறுவர்கள் தப்பியோடிய நிலையில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி பாதுகாவலர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
கோரிக்கை மனு
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் காவலாளிகளை தாக்கிவிட்டு 6 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இந்த நிலையில் அங்கு தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், காவலாளிகள், சமையலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அரசு பாதுகாப்பு இல்லத்தில் 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறோம். இங்கு கொடிய குற்றங்கள் செய்த இளஞ்சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த ஒரு சில மாதங்களாகவே சிறுவர்களின் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் எங்களை கேவலமான முறையில் பேசுவதும், ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நாங்கள் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 25-ந்தேதி சிறுவன் ஒருவன் கட்டிடத்தின் மேல் ஏறி கலாட்டாவில் ஈடுபட்டான்.
இந்த நிலையில் தற்போது 6 சிறுவர்கள் பணியில் இருந்த பாதுகாவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் குமரவேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பணி பாதுகாப்பு
அதனால் எங்களது பணிக்கும், உயிருக்கும் எந்தவித உத்தரவாதம் இல்லாமல் பணியாற்றி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு உயிர் பயத்தை காட்டி உள்ளனர். மேலும் மற்ற சிறுவர்களும் எங்களை மிரட்டி வருகின்றனர்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் கூறுகையில், உயிருக்கு பயந்து பணியாற்றி வருகிறோம். எனவே உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.