கைதிகளை கண்காணிக்க காவலர்கள் உடலில் கண்காணிப்பு கேமராக்கள்
வேலூர் ஜெயிலில் கைதிகளை கண்காணிக்க காவலர்கள் உடலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
வேலூர் ஜெயிலில் ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஜெயிலில் உள்ளே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உடலில் பொருத்தக்கூடிய கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் ஆகியோர் 5 போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
கட்டுப்பாட்டு அறை
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் ஜெயிலில் உயர்பாதுகாப்பு பகுதியில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. எனவே ஜெயிலில் பணியாற்றும் காவலர்களில் சட்டையில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அவர்கள் செல்லும் இடம் போன்றவை பதிவாகும்.
இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இந்த பிரத்யேக கண்காணிப்பு கேமரா ஜெயிலில் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஜெயில் காவலர்கள் இந்த கேமராக்களை பயன்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.