வாகன நிறுத்துமிடத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும்
பழனி அடிவாரம் வாகன நிறுத்துமிடத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனிக்கு வரும் பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். இதில் கார், வேன்களில் வரும் பக்தர்கள் இலவசமாக வாகனங்களை நிறுத்தி கொள்ள கிழக்கு மற்றும் மேற்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மின்இழுவை ரெயில்நிலையம் அருகே கிரிவீதியிலும் வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி பயனடைந்தனர். இந்நிலையில் கிரிவீதி வாகன நிறுத்தம் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கடைகளை வைத்து இருந்தனர். இதனால் வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
காவலர்கள் நியமனம்
இதேபோல் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தது. எனவே பக்தர்களின் நலன் கருதி கிரிவீதி வாகன நிறுத்துமிடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன்தொடர்ச்சியாக அடிவாரம் போலீசார் கிரிவீதி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். இதனால் அங்கு ஆக்கிரமிப்பு ஏதுமில்லாததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கிரிவீதியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோவில் நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது வாகன நிறுத்துமிடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதால் போக்குவரத்து தான் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு ஆக்கிரமிப்பை தடுக்க பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.