விலை வீழ்ச்சியால் கால்வாயில் கொட்டப்படும் கொய்யா பழங்கள்


விலை வீழ்ச்சியால் கால்வாயில் கொட்டப்படும் கொய்யா பழங்கள்
x
தினத்தந்தி 24 Jun 2023 2:30 AM IST (Updated: 24 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆயக்குடி சந்தையில் கொய்யா பழங்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் அவற்றை விவசாயிகள் கால்வாயில் கொட்டி சென்றனர்.

திண்டுக்கல்

ஆயக்குடி சந்தையில் கொய்யா பழங்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் அவற்றை விவசாயிகள் கால்வாயில் கொட்டி சென்றனர்.

ஆயக்குடி சந்தை

பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யா விவசாயம் நடைபெறுகிறது. 'பனாரஸ்', 'லக்னோ' என 2 ரக கொய்யா அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள தோட்டங்களில் பறிக்கப்படும் கொய்யாவை விவசாயிகள் ஆயக்குடி சந்தையில் வைத்து விற்பனை செய்கின்றனர். இவற்றை பழனி மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த மாத தொடக்கத்தில் ஆயக்குடியில் கொய்யா சீசன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் விவசாயிகள் கொய்யாவை பறித்து, தரம் பிரித்து ஆயக்குடி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு காய்களின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சீசன் தொடங்கியபோது 22 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யா ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

கொய்யா விலை சரிவு

இந்நிலையில் ஆயக்குடி சந்தைக்கு கொய்யா வரத்து அதிகமாகி உள்ளதால், அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விலை போகாத கொய்யா பழங்களை விவசாயிகள் சந்தை அருகே உள்ள கால்வாயில் வேதனையுடன் கொட்டி செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "சந்தைக்கு கொய்யா வரத்து அதிகமாகி உள்ள வேளையில், மாம்பழமும் கொண்டு வரப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பலர் மாம்பழத்தை வாங்கி செல்கின்றனர். அதேபோல் வெளியூர் கொய்யா வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இதனாலும் கொய்யா விலை சரிந்துள்ளது. ஒரு பெட்டி (22 கிலோ) கொய்யா குறைந்தது ரூ.600-க்கு போனால் தான் ஓரளவு கட்டுப்படியாகும். ஆனால் தற்போது ஒரு பெட்டி கொய்யா ரூ.300 முதல் ரூ.500 வரையே போகிறது. இதில் தரம் குறைந்த காய்கள் ஜூஸ் கம்பெனிக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் போதிய அளவில் ஜூஸ் ஆலைக்கும் கொண்டு செல்லப்படாததால் சாலையோரத்தில் விவசாயிகள் கொய்யாவை கொட்டி செல்கின்றனர்" என்றனர்.


Next Story