ஆயக்குடியில் தொடங்கியது கொய்யா 'சீசன்'


ஆயக்குடியில் தொடங்கியது கொய்யா சீசன்
x

ஆயக்குடியில் கொய்யா சீசன் தொடங்கியதால், சந்தைக்கு தினமும் சுமார் 25 டன் காய்கள் வரத்து உள்ளது.

திண்டுக்கல்

ஆயக்குடி சந்தை

பழனி சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். குறிப்பாக தோட்ட பகுதியில் கொய்யா, மா, சப்போட்டா என பழப்பயிர் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது.

அதிலும் ஆயக்குடி, கணக்கன்பட்டி, அமரபூண்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தோட்டங்களில் பறிக்கப்படும் கொய்யாவை ஆயக்குடி சந்தையில் வைத்து விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

கொய்யா பழங்கள்

ஆயக்குடி கொய்யா சந்தை என்பது, திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை இங்கு சந்தை செயல்படுகிறது.

இந்த சந்தையில் 'பனாரஸ்', 'லக்னோ' என 2 ரக கொய்யா பழங்கள் அதிகம் வரத்தாகின்றன. மேலும் மாம்பழம், நாவல், சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகளும் கொண்டு வரப்படுகின்றன.

இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து போட்டி போட்டு கொய்யாவை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக ஆயக்குடி சந்தைக்கு மாம்பழங்கள் வரத்து அதிகமாக இருந்தது.

சீசன் தொடங்கியது

இந்நிலையில் தற்போது கொய்யா சீசன் தொடங்கி உள்ளதால், ஆயக்குடி சந்தைக்கு கொய்யா பழங்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது. வழக்கமாக காற்று காலம் தொடங்கும்போது கொய்யா காய் பறிப்புக்கு வரும்.

அதன்படி தோட்டங்களில் கொய்யா மரங்களில் காய்கள் நன்கு காய்த்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் அவற்றை பறித்து, தரம் பிரித்து ஆயக்குடி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அங்கு காய்களின் தரத்தை பொறுத்து விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக 22 கிலோ எடை கொண்ட பெட்டி கொய்யா ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது போதிய அளவில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமும் 25 டன் காய்கள்

இதுதொடர்பாக கொய்யா வியாபாரி நெப்போலியன் கூறும்போது, ஜூன் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்கி ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை இருக்கும். அதன்படி சீசன் தொடங்கியதால் சந்தைக்கு தினமும் சுமார் 25 டன் காய்கள் வரத்தாகிறது. தரத்தை பொறுத்து 22 கிலோ எடை கொண்ட கொய்யா பெட்டி ரூ.600 முதல் ரூ.800 வரை விலை போகிறது. திருப்பூர், கோவை பகுதி வியாபாரிகள் போட்டி போட்டு கொய்யாவை வாங்கி செல்கின்றனர். இதேபோல் உள்ளூர் வியாபாரிகளும் வாங்கி, பழனி அடிவார பகுதியில் விற்பனை செய்கின்றனர். வரும் நாட்களில் காய் வரத்து அதிகமாக இருக்கும்போது விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.


Next Story