தகுதி சுற்று லீக் போட்டியில் கூடலூர் அணி வெற்றி


தகுதி சுற்று லீக் போட்டியில் கூடலூர் அணி வெற்றி
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தகுதி சுற்று லீக் போட்டியில் கூடலூர் அணி வெற்றி

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கிரிக்கெட் அணிகள் ஏ, பி மற்றும் சி என 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு டிவிஷனிலும் தலா 10 அணிகள் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஆண்டில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து விளையாட விருப்பம் தெரிவித்து மொத்தம் 15 அணிகள் விண்ணப்பித்து இருந்தன. அதன்படி தகுதி சுற்று லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் சி டிவிஷனில் சேர்க்கப்படும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த தகுதி சுற்று லீக் போட்டியில் கூடலூர் ஸ்ரீஜன் அணி மற்றும் குன்னூர் ஸ்னிப்பர்ஸ் அணி பங்கேற்று விளையாடியது. தலா 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் ஸ்ரீஜன் அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்களை குவித்தது. இந்த அணி வீரர்கள் கார்த்திக் 96 ரன்கள் மற்றும் குணசேகரன் 51 ரன்கள் எடுத்தனர். குன்னூர் ஸ்னிப்பர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் பிரகாஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 210 பந்துகளில் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குன்னூர் ஸ்னிப்பர்ஸ் அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணியின் கவுரி சங்கர் 68 ரன்கள், பூபதி 39 ரன்கள், ஹரிகரன் 30 ரன்கள் எடுத்தனர். கூடலூர் ஸ்ரீஜன் அணியின் பந்து வீச்சாளர் ரெஜினால்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story