குஜராத்-ராமேஸ்வரம் ரெயில் ராசிபுரத்தில் நின்று செல்ல தொடங்கியது


குஜராத்-ராமேஸ்வரம் ரெயில் ராசிபுரத்தில் நின்று செல்ல தொடங்கியது
x

குஜராத் ஓகா-ராமேஸ்வரம் ரெயில் ராசிபுரத்தில் நின்று செல்ல தொடங்கியது. ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் ரெயில் நிலையம்

ராமேஸ்வரம்-குஜராத் ஓகா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16733/16734), சென்னை சென்ட்ரல் முதல் பாலக்காடு வரை செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (22651), நாகர்கோவில் முதல் பெங்களூரு வரை செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (17236) ஆகிய 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் அதன் தொடக்க விழா ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

மத்திய மந்திரி எல்.முருகன்

அதன்படி நேற்று ராசிபுரம் ரெயில் நிலையத்தில் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா வரவேற்றார். ஏ.கே.பி. சின்ராஜ் எம்.பி., முன்னாள் எம்.பி.க்களும், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர்களுமான கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் ரெயில்வே துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. புல்லட் ரெயில், வந்தே பாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 73 ரெயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்படும். இதில் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி இந்த புதிய ரெயில் சேவைகளையும், ரெயில் நிறுத்தங்களையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கொடியசைத்து தொடங்கி வைத்தார்

முன்னதாக மத்தி மந்திரி எல்.முருகன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஒரு பொருள் ஒரு நிலையம் என்ற திட்டத்தின் கீழ் நெய் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். முடிவில் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.

ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு பகல் 1 மணிக்கு வந்திருந்த குஜராத் ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்த குஜராத் ஓகா-ராமேஸ்வரம் ரெயிலை ராசிபுரம் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

விழாவில் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் என்.பி.சத்யமூர்த்தி, பொதுச் செயலாளர் சேதுராமன், ஹரிகரன், மாநில நிர்வாகி சத்யேந்திரன், ராசிபுரம் தலைவர் வேல்முருகன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள், ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, முதுநிலை இயக்க மேலாளர் அனித் பிரகாஷ், முதுநிலை கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேல், ராசிபுரம் மற்றும் களங்காணி ரெயில் நிலைய அதிகாரிகள் ஆதிகேசவன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story