ரெயிலில் கஞ்சா கடத்திய குல்பி ஐஸ் வியாபாரி கைது


ரெயிலில் கஞ்சா கடத்திய குல்பி ஐஸ் வியாபாரி கைது
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ரெயிலில் கஞ்சா கடத்திய குல்பி ஐஸ் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் ரெயில் நிலையம் வழியாக புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ, ஏட்டுகள் கோவிந்தராஜ், சரிதா, மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா, ஏட்டு மகாமாஷ் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ரெயில் நிலைய வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவர், வெள்ளை நிற சாக்கு மூட்டையுடன் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே நடந்து வந்துகொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 4½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குல்பி ஐஸ் வியாபாரி கைது

விசாரணையில் அவர், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகர் பகுதியை சேர்ந்த குர்ஷேத்ஆதவ் மகன் ஹனீஷ்அலி (வயது 41) என்பதும், இவர் புதுடெல்லியில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் ஹனீஷ்அலி, புதுச்சேரியில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருவதும், அடிக்கடி சொந்த மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து திரும்பி வரும்போது கஞ்சாவை ரெயிலில் கடத்திக்கொண்டு வந்து புதுச்சேரி மாநிலம் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்ததும், இவ்வாறாக அவர் கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்று ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும், தற்போது கடலூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக விழுப்புரத்தில் இருந்து ரெயிலில் இறங்கி பின்னர் பஸ் மூலம் கடலூருக்கு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஹனீஷ்அலியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story