பாலமுருகன் கோவிலில் குண்டம் திருவிழா


பாலமுருகன் கோவிலில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 28 May 2023 12:45 AM IST (Updated: 28 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே பாலமுருகன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே பாலமுருகன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

குண்டம் திருவிழா

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட ஜக்கனாரை அருகே வள்ளுவர் நகரில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 24-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா நேற்று முன்தினம் விநாயகர் வேள்வி, 108 சங்காபிஷேகம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அம்மன் அழைப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று காலை 7.30 மணிக்கு காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. 8.30 மணிக்கு ஆடத்தொரை ஆற்றில் இருந்து அம்மன் மேள-தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து ராட்சத கிரேனில் தொங்கியபடி வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

அன்னதானம்

மதியம் 12.30 மணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட திரளான பக்தர்கள் கோவிலில் பூ குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு அன்ன பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு கண்கவர் வானவேடிக்கையும், 8 மணிக்கு வள்ளுவர் நகர் சிறுவர்- சிறுமிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, 9 மணிக்கு நீர்தொழுதல், 11 மணிக்கு மாவிளக்கு பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஆற்றங்கரையில் அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது


Next Story