கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தஞ்சையில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்


தஞ்சையில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கூலித்தொழிலாளி கொலை

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் மனோகரன் (வயது30). கூலித்தொழிலாளி. இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் இருந்தது. கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த சிலர் மனேகரனை அழைத்து சென்று, மது அருந்தினர்.பின்னர், அவரை கொலை செய்து, புதுஆற்றில் வீசி விட்டு சென்றனர். 2 நாட்கள் கழித்து மனோகரன் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோர்ட்டில் சரண்

இந்தநிலையில் மனோகரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வந்த தஞ்சை சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த கண்ணன் மகன் இளநீர்மணி என்ற மணிகண்டன் (35), குமார் மகன் உமாமகேஸ்வரன் (24), கண்ணன் மகன் தினேஷ் (24) ஆகிய 3 பேரும் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி சரண் அடைந்தனர்.இதேபோல் சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்த துரை மகன் விஜய் (30), சேவப்பநாயக்கன்வாரி வடகரையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்குமார் (25), சேகர் மகன் நடராஜ் (21) ஆகிய 3 பேரும் தஞ்சை முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கைது

மேலும் சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த தனபால் மகன் சக்தி (20), ரமேஷ்குமார் மகன் கார்த்திக் (20), அர்ஜூனன் மகன் அஜித்குமார் (24), மருத்துவகல்லுாரி சாலை, நடராஜபுரத்தை சேர்ந்த அமுது மகன் அந்தோணிபிச்சை (35) ஆகிய 4 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.இவர்கள் 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இவர்கள் 10 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து 10 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.


Next Story