கொடைரோடு ரெயில் நிலையத்தில் நின்று சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்
கொடைரோடு ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது. இதற்கான தொடக்க விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டார்.
கொடைரோடு ரெயில்நிலையம்
குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து செல்லும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கொடைரோட்டில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைக்கருத்தில் கொண்டு கொடைரோடு ரெயில் நிலையத்தில் 2 ரெயில்களும் நின்று செல்ல மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ், கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கொடைரோட்டில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து கொடைரோடு ரெயில்நிலையத்தில் நேற்று முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது. இதற்கான தொடக்க விழா, கொடைரோடு ரெயில்நிலையத்தில் நடந்தது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
விழாவுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் வரவேற்றார்.
விழாவில் குருவாயூரில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 1.15 மணிக்கு கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. பின்னர் 1.20 மணிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன், வேலுச்சாமி எம்.பி., பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் கொடி அசைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு
விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொடைரோட்டில் இந்த 2 ரெயில்கள் நின்று செல்வதால் இப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். மதுரை, திண்டுக்கல் சென்று ரெயில் ஏற வேண்டிய அவசியமில்லை. மத்திய ரெயில்வே மந்திரி தமிழகத்தின் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டவர். இதனால் ரெயில்வே துறை மூலம் தமிழகத்தில் பணிகள் மேற்கொள்ள 2023-2024-ம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அமிர் பாரத் திட்டத்தின் கீழ் சர்வதேச அளவில் ரெயில்நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. அதில் மதுரைக்கு ரூ.413 கோடி, ராமேசுவரத்திற்கு ரூ.113 கோடி, காட்பாடிக்கு ரூ.461 கோடி, சென்னைக்கு ரூ.842 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
மேலும் தமிழகத்தில் திண்டிவனம்-திருவண்ணாமலை உள்பட 9 புதிய ரெயில்பாதைகள் அமைக்க முதல் தவணையாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் புல்லட் ரெயில் திட்ட சேவை விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
4 ரெயில்வே மேம்பாலங்கள்
இதைத்தொடர்ந்து வேலுச்சாமி எம்.பி. பேசுகையில், கொடைரோட்டில் 9 ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என பல முறை ரெயில்வே மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். தற்போது 2 ரெயில்கள் கொடைரோட்டில் நிற்க அனுமதி பெற்றுள்ளோம். ஒட்டன்சத்திரம், தாழையூத்து, சத்திரப்பட்டி, பழனி-தாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த பகுதிகளில் 4 ரெயில்வே மேம்பாலங்கள் கட்ட அனுமதி பெற்று தந்துள்ளேன். திருவனந்தபுரம்-மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது. கொடைரோடு ஜெகநாதபுரம் மக்கள் பாதுகாப்பாக ரெயில்வே கேட்டை கடந்து செல்ல ரெயில்வே நிர்வாகம் தடுப்பு சுவர் ஏற்படுத்திதர வேண்டும். கொடைரோட்டில் இன்னும் கூடுதல் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், நிலக்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் விமல்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜங்கம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரெயில்வே மதுரை கோட்ட வணிக மேலாளர் ரதிப்பிரியா நன்றி கூறினார்.
இதேபோல் நாளை மறுநாள் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.