ரூ.40 லட்சம் குட்கா பறிமுதல்


ரூ.40 லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:17:10+05:30)

கூடலூரில் ரூ.40 லட்சம் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் ரூ.40 லட்சம் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்தனர்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக கேரளாவுக்கு ஏராளமான சரக்கு லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. 3 மாநில சந்திப்பு பகுதி என்பதால் வாகனங்களும் அதிகளவு இயக்கப்படுகிறது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள தமிழக, கேரளா, கர்நாடக எல்லையோர சோதனைச்சாவடிகளில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு மைசூரில் இருந்து கூடலூருக்கு தமிழக பதிவு எண் கொண்ட லாரி தொரப்பள்ளி சோதனைச்சாவடிக்கு வந்து கொண்டிருந்தது. இந்தலாரியில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் அருள் உள்ளிட்ட போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.40 லட்சம் குட்கா

அப்போது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு பகுதிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் கொண்டு செல்வதாக லாரி டிரைவர் கூறினார். இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே 58 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) பாக்கெட்டுகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுதீர் (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் மற்றும் அதை கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

கூடலூரில் சமீப காலமாக போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை பரிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story