சுற்றுலா வேனில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு சுற்றுலா வேனில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு சுற்றுலா வேனில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா பறிமுதல்
தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர். அப்போது வேனில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனுக்குள் சோதனை நடத்திய போது, சில மூட்டைகள் இருந்தது.
அதை திறந்து பார்த்தபோது 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.23,880 ஆகும். மேலும் கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
பின்னர் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்காவை கடத்த முயன்ற கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சாணபாட்ஷா (வயது 51), பஷுர் அகமது (40), குண்டல்பெட்டை சேர்ந்த கோவிந்தசாமி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகள் கூடலூரில் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் கூறும்போது, சுற்றுலா பயணிகள் போர்வையில் கடத்தல் பேர்வழிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.