டெம்போவில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்
பழனியில் இருந்து குமரிக்கு நூதன முறையில் டெம்போவில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி,
பழனியில் இருந்து குமரிக்கு நூதன முறையில் டெம்போவில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
ஆரல்வாய்மொழி போலீசாருக்கு பழனியில் இருந்து குட்கா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முப்பந்தல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வைக்கோல் கட்டுகளுடன் வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அதில் வைக்கோல் கட்டுகளுக்கு இடையில் மூடைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை பிரித்து பார்த்த போது குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
ரூ.6லட்சம் குட்கா
அதைத்தொடர்ந்து அந்த டெம்போவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். வைக்கோல் கட்டுகளை அகற்றி விட்டு பார்த்த போது அதில் இருந்த மூடைகளில் 400 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். வைக்கோல் கட்டுகளுக்கு இடையில் வைத்து கடத்திய குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டெம்போவில் வந்த 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது டிரைவர் பழனி ஆவணி மூலவீதி தொப்பை செட்டியார் சந்தை பகுதியை சேர்ந்த பீர் முகமது (வயது 39) என்றும், உடன் இருந்தவர் பழனியை அடுத்த இறைம நாயக்கன்பட்டியை சேர்ந்த மதனகோபால் (67) என்பதும், திசையன்விளையை சேர்ந்த ஒருவர் பழனியில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், அவர் டெம்போவில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது. மேலும் மளிகை கடை நடத்தி வருபவர் திசையன்விளையில் குடோன் வைத்து அங்கிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை டெம்போக்கள் மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து பீர் முகமது மற்றும் மதனகோபால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.