பெங்களூருவில் இருந்து மேச்சேரிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து மேச்சேரிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேச்சேரி:
சரக்கு வேன்
சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மேச்சேரி-ஓமலூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மேச்சேரியை அடுத்த சாத்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே ஒரு சரக்கு வேன் நின்று கொண்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று, சரக்கு வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வேனில் மருந்து பெட்டிகள் உள்ளது என்றும், மேலும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியுள்ளார்.
ரூ.8 லட்சம் குட்கா
இதைத்தொடர்ந்து போலீசார் சரக்குவேனில் சோதனை நடத்தினர். அப்போது முதலில் காலி மருந்து பெட்டிகள் இருந்தன. அதற்கு உள்பகுதியில் சோதனை செய்த போது ஏராளமான மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன.
சுமார் 870 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். தொடர்ந்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெயல் நகர் சூரபள்ளியா பகுதியை சேர்ந்த பவன்தேவ் (வயது 24) என்பதும், இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேச்சேரிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவன்தேவ்வை கைது செய்தனர். மேலும் போலீசார் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.