உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குட்ஷெட் லாரி உரிமையாளர்கள்
நெல் மூட்டைகள் இறக்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் மூட்டைகள் இறக்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குட்ஷெட்டில் இருந்து திருச்சியில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த சில தினங்களாக கீழே இறக்கப்படாமல் லாரிகளிலேயே இருப்பதாகவும், அவற்றை கீழே இறக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த போராட்டம் நடந்தது.
உள்ளிருப்பு போராட்டத்திற்கு சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தகவல் அறிந்த மண்டல மேலாளர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பரபரப்பு
இதில் லாரிகளில் உள்ள நெல் மூட்டைகளை கீழே இறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.