ரூ.6 கோடி மதிப்பில் 150 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள்; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பில் 150 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பில் 150 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் கூறினார்.
மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் செல்வலட்சுமி அமிதாப், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது தங்கள் வார்டுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். மாவட்ட கவுன்சிலர் நிதியில் செயல்படுத்தப்படக் கூடிய திட்டங்களுக்கு மாவட்ட கவுன்சிலிடம் அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து புதிய அலுவலகத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
உடற்பயிற்சி கூடங்கள்
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பேசும் போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் நாட்டின் மது, போதை ஆகியவற்றில் மக்கள் சீரழிவதை தடுக்கவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 24 கிராம பஞ்சாயத்துகளிலும் மக்களுக்கு முன்மாதிரி உடற்பயிற்சி கூடம் அமைத்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 150 உடற்பயிற்சி கூடங்கள் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிநீர் குழாய் பதிக்கும் பணி
மானூர் யூனியன் நாஞ்சாங்குளம் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் மகேஷ்குமார் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மானூர் யூனியன் தலைவி ஸ்ரீலேகா அன்பழகன், துணைத்தலைவர் நயினார் முகமது, பஞ்சாயத்து தலைவர் பசுபதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.