சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை; பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்
நெய்க்காரப்பட்டி அருகே சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆலங்கட்டிமழை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் குதிரையாறு அணை மூலம் பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், நரிப்பாறை, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.
நெற்பயிர்கள் நன்கு விளைந்ததால் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தது. எனவே விவசாயிகள் எந்திரம் கொண்டு அறுவடை செய்வதற்காக வயலில் இருந்து நீரை வடித்து தயாராக வைத்திருந்தனர். இந்நிலையில் பழனி வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. அதன்படி நேற்று முன்தினமும் பகலில் கடும் வெயில் நிலவிய நிலையில், மாலை 5 மணி அளவில் திடீரென வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. அப்போது வானில் இருந்து 'ஐஸ்' கட்டிகளாக விழுந்து ஆலங்கட்டி மழை பெய்தது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு 'ஐஸ்' கட்டிகளை எடுத்து கையில் வைத்து ரசித்தனர்.
நெற்பயிர்கள் நாசம்
இதற்கிடையே மழை பெய்தபோது பலத்த சூறைக்காற்றும் வீசியது. ஆலங்கட்டி மழை, சூறைக்காற்று என ஒரு சேர இருந்ததால் சாகுபடி செய்த நெற்பயிர்களில் நெல்மணிகள் எல்லாம் உதிர்ந்து வயலில் விழுந்தது. அதேபோல் காய வைத்திருந்த வயலிலும் தண்ணீர் தேங்கியது. காவலப்பட்டி பகுதியில் சூறைக்காற்றால் தோட்ட பகுதியில் இருந்த வாழை, தென்னை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்தன.
சில இடங்களில் தோட்டத்து வீட்டின் மேற்கூரைகளும் காற்றுக்கு சேதமாகியது. மழை நின்ற பின்பு விளைநிலத்துக்கு சென்று விவசாயிகள் பார்த்தனர். அப்போது நெற்பயிரில் நெல்மணிகள் எல்லாம் உதிர்ந்து வெறுமென செடியாக காட்சி அளித்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் ஆலங்கட்டி மழை, சூறைக்காற்றால் பயிர்கள் நாசமாகி போனதை கண்ட விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.
நிவாரணம் வழங்க...
பயிர்கள் சேதமானது குறித்து குதிரையாறு அணை பஞ்சந்தாங்கி விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், ஆலங்கட்டி மழை, சூறைக்காற்று என ஒருசேர நிகழ்ந்ததை இப்போதுதான் பார்த்தேன். இந்த மழை, காற்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் நாசமானது. அதேபோல் தோட்ட பகுதியில் பயிரிட்டிருந்த கரும்பு, மக்காச்சோளம் ஆகியவையும் சாய்ந்து போனது. மேலும் தோட்டத்தில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை, வாழை மரங்களும் அடியோடு முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
பழனி தாசில்தார் சசிக்குமாரிடம் கேட்டபோது, சூறைக்காற்று-மழைக்கு பாப்பம்பட்டி, காவலப்பட்டி சுற்று வட்டார பகுதியில் நெல், கரும்பு, வாழை, தென்னை பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமாகி உள்ளது. இதுபற்றிநேரில் ஆய்வு செய்தோம், கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது என்றார்.