புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 103 மாணவர்களுக்கு முடிதிருத்தம்


புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 103 மாணவர்களுக்கு முடிதிருத்தம்
x

வேலூர் ஊரீசு, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கு புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 103 மாணவர்களுக்கு சீரான முறையில் முடிதிருத்தம் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் ஊரீசு, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கு புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 103 மாணவர்களுக்கு சீரான முறையில் முடிதிருத்தம் செய்யப்பட்டது.

புள்ளிங்கோ ஸ்டைல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சீரான முறையில் முடிவெட்டி பள்ளிக்கு வர வேண்டும். வித்தியாசமான முறையில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டியபடி மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அவ்வாறு வரும் மாணவனின் பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன்பின்னர் அதேபோன்று வரும் மாணவனுக்கு பள்ளிவளாகத்தில் முடிவெட்டி விட வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

வேலூர் அண்ணாசாலையில் ஊரீசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டி பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் சீரான முறையில் முடிவெட்டி விட்டு பள்ளிக்கு வரும்படி தலைமைஆசிரியர் எபினேசர் கூறினார். ஆனாலும் பல மாணவர்கள் புள்ளிங்கோ ஸ்டைலில் பள்ளிக்கு வந்தனர்.

46 மாணவர்களுக்கு முடிதிருத்தம்

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சீரான முறையில் முடி வெட்டாமல் வந்திருந்த மாணவர்களை தலைமைஆசிரியர் எபினேசர் மேற்பார்வையில் ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பாக சென்று கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்தில் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் 2 பேர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு தலைமுடியை திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்து அழைத்து வரும்போது கழிப்பறைக்கு செல்வதாக கூறி வேறு இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் அழைத்து வந்து முடிவெட்ட வைத்தனர். பின்னர் அவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டது. நேற்று ஒரேநாளில் 46 மாணவர்களுக்கு சீரான முறையில் முடிதிருத்தம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், மாணவர்கள் பள்ளிக்கு சீரான முறையில் முடியை வெட்டி, சீருடை அணிந்து வரவேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம். கல்வி தானாக வரும். கலெக்டரின் அறிவுறுத்தலின்பேரில் இதனை எனது சொந்த செலவில் செய்துள்ளேன் என்றார்.

வெங்கடேஸ்வரா பள்ளி

இதேபோல் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 57 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் நெப்போலியன் தனது சொந்த செலவில் முடி திருத்தம் செய்தார்.


Next Story