தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்


தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து ெசய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.

அரை நிர்வாண போராட்டம்

தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் திருத்துவராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்ட இணைச்செயலாளர் தங்கராஜ், சி ஐ டி யு மாவட்ட துணை தலைவர் குமாரவேல், மாவட்ட துணை தலைவர் ரவி தாகூர், ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் குண்ணிமலையான், அனைத்து துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர் ஜெயபாண்டி நிறைவுரையாற்றினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி நிலுவையுடன் வழங்க வேண்டும், காசு இல்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை மின் வாரியம் ஏற்று நடத்த வேண்டும், முடக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், விதவை, விவாகரத்தானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திரளான ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக செயலாளர் தானு மலையான் நன்றி கூறினார்.


Next Story