மாணவ, மாணவிகளுக்கு 15-ந் தேதி முதல் அரையாண்டுத்தேர்வு
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
அரையாண்டுத்தேர்வு
தமிழக பள்ளக்கல்வித்துறை சார்பில், வருகிற 15-ந் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் 23-ந் தேதி வரை நடக்கிறது. தேர்வு மையங்கள், தேர்வு வினாத்தாள் ஆகியன அந்தந்த மாவட்டங்களில் தயாரித்து வழங்கப்படும்.
கடந்த காலாண்டுத்தேர்வின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நாட்களில் தேர்வுகள் நடத்தப்பட்டதால், வினாத்தாள் குழப்பம், வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை பகிருவது, பழைய வினாத்தாள்களை வருடத்தை மட்டும் மாற்றி வாட்ஸ்அப் தளத்தில் பதிவிடுவது உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டன. அதனை தவிர்ப்பதற்காக, தற்போது அந்தந்த மாவட்டங்கள் தேர்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு அறிவித்துள்ள தேதிகளில் மட்டும் அந்தந்த பாடங்களுக்கு தேர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தேர்வு நடக்கிறது. 16-ந் தேதி 6,7,8-ம் வகுப்புக்கு தமிழ் தேர்வும், 9,10-ம் வகுப்புக்கு ஆங்கில தேர்வும் நடக்கிறது. 19-ந் தேதி, 6,7,8-ம் வகுப்புக்கு ஆங்கில தேர்வும், 9,10-ம் வகுப்புக்கு கணித தேர்வும் நடக்கிறது. 20-ந் தேதி 6,7,8-ம் வகுப்புக்கு கணித தேர்வு நடக்கிறது. 21-ந் தேதி 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் தேர்வு நடக்கிறது. 22-ந் தேதி 6,7,8-ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வும், 23-ந் தேதி 9,10-ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வும், 6,7,8-ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி தேர்வும் நடக்கிறது. இதில் 6,8 மற்றும் 10-ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், 7 மற்றும் 9-ம் வகுப்புக்கு மதியம் 1.45 மணி முதல் மாலை 4.15 மணி வரையும் தேர்வு நடக்கிறது.
11, 12-ம் வகுப்பு
11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 15-ந் தேதி தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகள் நடக்கின்றன. 16-ந் தேதி ஆங்கிலத்தேர்வு நடக்கிறது. 19-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புக்கல்வி தேர்வுகளும், 12-ம் வகுப்புக்கு ஆங்கிலம் தொடர்பியல், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், உயிரி வேதியியல், முதுநிலை தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை எலெக்டிரிகல் என்ஜினீயரிங், பட்டயக்கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
20-ந் தேதி 11-ம் வகுப்புக்கு வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் பாடங்களுக்கும், 12-ம் வகுப்புக்கு இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
21-ந் தேதி 11-ம் வகுப்புக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலெக்டிரிகல் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் ஆகிய பாடங்களுக்கும், 12-ம் வகுப்புக்கு கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுப்பழக்கம், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் ஆகிய பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
உயிரியல், விலங்கியல்
22-ந் தேதி 11-ம் வகுப்புக்கு ஆங்கிலம் தொடர்பியல், மரபு மற்றும் இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், உயிரி வேதியியல், முதுநிலை தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை எலெக்டிரிகல் என்ஜினீயரிங், பட்டயக்கணக்கியல் ஆகிய பாடங்களுக்கும், 12-ம் வகுப்புக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலெக்டிரிகல் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் ஆகிய பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
23-ந் தேதி 11-ம் வகுப்புக்கு கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுப்பழக்கம், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் ஆகிய பாடங்களுக்கும், 12-ம் வகுப்புக்கு வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வுகள் 11-ம் வகுப்புக்கு மதியம் 1.45 முதல் மாலை 5 மணி வரையிலும், 12-ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. தேர்வு மையங்கள், பறக்கும்படை, வினாத்தாள், விடைத்தாள் மையங்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையிலான கல்வி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.