கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை; பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் சிக்கினர்
ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் சிக்கினர்.
ஊட்டி
ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் சிக்கினர்.
திருட்டு சம்பவங்கள்
மலைப்பிரதேசமான நீலகிரிக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா தலங்களில் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்தது.
கடந்த மாதம் பைன்பாரஸ்ட் பகுதியில் கேரள தம்பதியின் கார் கண்ணாடியை உடைத்து தங்க மற்றும் வைர நகைகள் திருடப்பட்டது. இதுகுறித்து ஊட்டி புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு பணி
இதேேபான்று நேற்று முன்தினமும் தொட்டபெட்டா செல்லும் வழியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஒரு கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் திருட்டு நடக்கவில்லை. எனினும் மர்ம ஆசாமிகள் திருட்டில் ஈடுபட முயன்றது, காரின் முன் பகுதியில் இருந்த கேமராவில் வீடியோவாக பதிவாகியிருந்தது. மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தவிர அந்த ஆசாமிகளை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் வீடியோவில் இருந்தவர்களின் புகைப்படங்கள் சோதனைச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது.
2 பேர் சிக்கினர்
இந்த நிலையில் வீடியோவில் இருந்த ஆசாமிகள் நேற்று மதியம் தொட்டபெட்டாவில் இருந்து சேரிங்கிராஸ் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். வீடியோவில் காட்சியளித்த அதே ஆடைகளை அணிந்து வந்திருந்ததால், அவர்களை அங்கிருந்த வாலிபர்கள் சுற்றி வளைத்தனர். எனினும் அதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரையும் போலீசார் ேதடி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் யார், இதுவரை கைவரிசை காட்டியது எவ்வளவு என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.