வீட்டு மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கும் மாற்றுத் திறனாளி பெண்


வீட்டு மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கும் மாற்றுத் திறனாளி பெண்
x

மடத்துக்குளம் அருகே பல ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கும் மாற்றுத் திறனாளி பெண்அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர்

மடத்துக்குளம் அருகே பல ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கும் மாற்றுத் திறனாளி பெண்அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி

மனிதனுக்கு உணவு, தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மின்சாரமும் முக்கியம் என்று சொல்லுமளவுக்கு வாழ்க்கையுடன் கலந்து விட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக மின் இணைப்புக்காக போராடி வரும் பெண்ணின் வாழ்க்கை தினசரி போராட்டமாகவே உள்ளது. மடத்துக்குளம் பேரூராட்சி 2-வது வார்டு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பாத்தாள். மாற்றுத் திறனாளியாக இருப்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடிவதில்லை.

இவருடைய மகள் மாரியம்மாள், கணவனைப் பிரிந்து மகள் தீபிகாவுடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். மாரியம்மாள் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். தீபிகா தற்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் வீட்டு மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை.

தெரு விளக்கு

இதனால் இரவு நேரங்களில் மாற்றுத் திறனாளியான கருப்பாத்தாள் வீட்டுக்குள்ளேயே தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. மின்விசிறி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததால் வெயில் காலத்தில் புழுக்கத்திலும், மழைக்காலங்களில் கொசுக்கடியிலும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. அத்துடன் தீபிகா படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் தெரு விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இடையூறுகளை விலக்கி, கருணை அடிப்படையில் உடனடியாக வீட்டு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வீட்டுக்கு சற்று தொலைவில் இருக்கும் சாக்கடைக்கால்வாயில் வீட்டுக்கழிவுநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்பதும் அவருடைய கோரிக்கையாக உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்பது இந்த குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story