அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆழ்வார்குறிச்சி கோவில் சாமி சிலைகள் ஒப்படைப்பு


அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆழ்வார்குறிச்சி கோவில் சாமி சிலைகள் ஒப்படைப்பு
x

அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆழ்வார்குறிச்சி கோவில் சாமி சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.

தென்காசி

கடையம்:

அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆழ்வார்குறிச்சி கோவில் சாமி சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து புராதன சாமி சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. அந்த சிலைகளை மீட்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டு அருங்காட்சியகத்தில் இருந்து துவாரபாலகர் கற்சிலை, சம்பந்தர், குழந்தை சம்பந்தர் ஆகிய உலோகச்சிலைகள் மீட்கப்பட்டன. அதேபோன்று அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து நடராஜர், நந்திகேஷ்வரர், கங்காளமூர்த்தி, வரதராஜபெருமாள், பார்வதி, சிவன் மற்றும் பார்வதி (ஒரே பீடத்தில்) ஆகிய உலோகச்சிலைகள் மீட்கப்பட்டன. இந்த 10 சிலைகளும் கடந்த 5-ந் தேதி அன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டன.

கோவில்களில் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட சிலைகளில் நந்திகேஷ்வரர், கங்காளமூர்த்தி ஆகிய 2 உலோக சாமி சிலைகள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி கிராமத்தில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்டவை ஆகும். சென்னையில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, தினகரன், கூடுதல் எஸ்.பி. மலைச்சாமி ஆகியோர் முன்னிலையில் இந்த சிலைகள் அந்த கோவிலின் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

அதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆழ்வார்குறிச்சி கோவிலுக்கு சிலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கோவில் சிலைகளை கோவில் நிர்வாக அதிகாரி, குற்றாலநாதர் கோவிலுக்கு எடுத்துச் சென்றார்.


Next Story