ஆட்டோவில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
ஆட்டோவில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பீச்ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் சவாரிக்காக ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது திருவிதாங்கோடு புத்தன்மேடு பகுதியை சேர்ந்த பிரமோத் (42) என்பவர் வடசேரி பஸ் நிலையம் செல்வதற்காக சரவணனின் ஆட்டோவில் ஏறினார்.
பின்னர் வடசேரி பஸ் நிலையம் சென்று சரவணன் அவரை இறக்கி விட்டு திரும்பினார். சிறிது நேரம் கழித்து ஆட்டோவின் பின் இருக்கையை சரவணன் பார்த்தார். அப்போது இருக்கையில் ஒரு பிளாஸ்டிக் கவா் இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது அதிலிருந்த ஒரு பெட்டியில் 1½ பவுன் நகை இருந்தது. ஆட்டோவில் பயணித்த பயணி யாரோ நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது.
உடனே சரவணன் நகையை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஆட்டோவில் நகையை தவறவிட்டது பிரமோத் என்பது தெரியவந்தது. இதனை தொடர்நது பிரமோத்தை தொடர்பு கொண்ட போலீசார் அவரை கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு நேற்று வரவழைத்தனர். போலீஸ் நிலையம் வந்த பிரமோத்திடம், நகைக்கான பில் மற்றும் அடையாளங்கள் ஆகிய விவரங்களை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து நகையை பிரமோத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் நகையை மீட்டு நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் பாராட்டி பரிசு வழங்கினார்.